புத்தூர் அக்ரஹாரத்தில் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்-கரையோரத்தில் குழிதோண்டி புதைப்பு


புத்தூர் அக்ரஹாரத்தில் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்-கரையோரத்தில் குழிதோண்டி புதைப்பு
x
தினத்தந்தி 30 April 2021 4:31 AM IST (Updated: 30 April 2021 4:31 AM IST)
t-max-icont-min-icon

புத்தூர் அக்ரஹாரம் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை படகில் எடுத்து வந்து ஏரிக்கரையில் குழிதோண்டி புதைத்தனர்.

ஆட்டையாம்பட்டி:
புத்தூர் அக்ரஹாரம் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை படகில் எடுத்து வந்து ஏரிக்கரையில் குழிதோண்டி புதைத்தனர்.
செத்து மிதந்த மீன்கள்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் அக்ரஹாரம் ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வளர்க்கப்படும் மீன்கள் வருடாந்திர குத்தகை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஏரியில் வளர்க்கப்பட்ட லோகு போன்ற மீன்கள் செத்து மிதந்தன. இந்த மீன்களை எடுத்து படகு மூலம் ஏரிக்கரைக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு எடுத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான மீன்களை ஏரிக்கரையில் குழிதோண்டி புதைத்தனர்.
வெப்ப சலனம்
இதுபற்றி ஏரியின் குத்தகைதாரர் கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டு காலமாக ஏரியை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தால் மீன் பிடித்து விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் ஏரியில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள் செத்து மடிகின்றன. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஜிலேபி, லோகு மீன்கள் செத்தன.
நஷ்டஈடு
செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் ஏற்படுவதால் சுகாதார பணி மேற்கொண்டு ஏரியின் கரையோரம் குழிதோண்டி மீன்களை புதைத்து வருகிறோம்.
கொரோனா காரணமாக மீன்களை விற்பதில் சிரமம் ஏற்படுவதாலும், ஏரியில் மீன்கள் செத்து விடுவதாலும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இதற்காக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story