சேலத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்:
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெயிண்டர்
சேலம் அன்னதானப்பட்டி அல்லிக்குட்டை காலனியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 23), பெயிண்டர். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்
சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் உறவினர் ஒருவருடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். வாலிபர் தற்கொலை குறித்து வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதியவர்
சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தை கவுண்டர் (87). இவர் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை கவுண்டர் இறந்தார்.
இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story