மும்பையில் மருந்து தட்டுப்பாடு எதிரொலி; தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்; மராட்டிய மாநகராட்சி இரவில் அறிவிப்பு


மும்பையில் மருந்து தட்டுப்பாடு எதிரொலி; தடுப்பூசி போடும் பணி திடீர் நிறுத்தம்; மராட்டிய மாநகராட்சி இரவில் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 6:21 AM IST (Updated: 30 April 2021 6:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் 2-வது அலை நாட்டின் நிதி தலைநகர் மும்பையை புரட்டிப்போட்டு உள்ளது.

மக்கள் ஆர்வம்

மும்பையில் மக்கள் அதிகளவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதலை அளித்து உள்ளது. ஆனாலும் மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறையவில்லை. இது தலைநகர் மும்பை மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் கொரோனா தடுப்பூசியையும் 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் ஆர்வமாக போட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் மக்கள் இடையே சற்று தயக்கம் இருந்தாலும், பின்னர் அவர்கள் மிகவும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட தொடங்கினர்.

அலைமோதல்

தடுப்பூசி போடும் மையங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பி.கே.சி. உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்கள் காத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பொது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தால் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டனர். நேற்றும் பல மையங்களில் தடுப்பூசி போட கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்து கிடந்தனர். தடுப்பூசி போடுவதற்குள் தவியாய் தவித்து போனார்கள்.

கோரேகாவில் தடுப்பூசி போட நின்ற ஸ்மிரிதி பிந்திரா என்ற 54 வயது பெண் கூறுகையில், ‘‘3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நிற்கிறேன். வரிசை நகரவே இல்லை. இன்று தடுப்பூசி போட முடியுமா என்பது கூட உறுதியாக தெரிவில்லை’’ என சோகத்துடன் கூறினார்.

காரணம் என்ன?

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த பணி மதியம் 12 மணிக்கு தான் தொடங்குகிறது. ஆனால் மக்கள் காலை 6 மணிக்கே மையத்துக்கு வந்து விடுகின்றனர். தடுப்பு மருந்து குறைவாக இருப்பது தான் நீண்ட வரிசைகளுக்கு காரணம். இதேபோல கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது’’ என்றார்.

கூடுதல் கமிஷனர் தகவல்

இதுகுறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறியதாவது:-

புதன்கிழமை இரவு எங்களுக்கு 75 ஆயிரம் தடுப்பூசி கிடைக்கும் என கூறப்பட்டது. இதுபோல குறைந்தளவு மருந்து இருக்கும் போது, மாநகராட்சி சில மையங்களை மட்டுமே திறந்து இருந்தது. மற்றவை மூடப்பட்டு இருந்தன. போதிய இருப்பு இல்லாத போதும் நாங்கள் மாலை வரை 50 ஆயிரம் தடுப்பூசியை பயன்படுத்தி உள்ளோம். ஒருவேளை கூடுதல் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை என்றால், தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். போதிய சப்ளை கிடைக்கவில்லையெனில் தடுப்பூசி பணி அடுத்த 2 நாட்களுக்கு நிறுத்தப்படும். போதியளவு மருந்து இருப்பு வந்தவுடன் தடுப்பூசி வேகமாக போடப்படும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

நிறுத்திவைப்பு

இந்தநிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் இல்லை. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாளை (மே 1-ந் தேதி) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ெதாடங்கி வைக்கப்படாது என்று ஏற்கனவே மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story