கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற இணையதளத்தில் ஆஸ்பத்திரிகளின் படுக்கை விவரங்கள்; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.
படுக்கைகள் விவரம்
புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் சிகிச்சை தேடி கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாக உள்ளதா என்பதை கண்டறிய முடியவில்லை. இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழிகாட்டுதலின்பேரில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் தங்களது படுக்கை இடங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.
இணையதள முகவரிஅதன்படி https://covid19dashboard.py.gov.in/BedAvailabilityDetails இணையதள முகவரியில் கொரோனா ஆஸ்பத்திரிகளில் எத்தனை படுக்கை வசதி காலியாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். புதுவை மாநிலத்தில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் வீண் வதந்திகளை பொதுமக்கள் கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை. கொரோனா தொடர்பான சிரமம் குறித்து 104 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கலாம். மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.