குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவியும் கொரோனா நோயாளிகள்; அவசர சிகிச்சை, பிரசவத்துக்கு வருபவர்களும் பாதிக்கும் அபாயம்


குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவியும் கொரோனா நோயாளிகள்; அவசர சிகிச்சை, பிரசவத்துக்கு வருபவர்களும் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 30 April 2021 7:50 AM IST (Updated: 30 April 2021 7:50 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிவதால் அவசர சிகிச்சை, பிரசவத்துக்கு வருபவர்களும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரியில் குவிகிறார்கள்

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்து வருகிறார்கள்.

கொரோனா நோய் பாதித்த சான்றிதழுடன் வரும் இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ரத்த பரிசோதனை, சி.டி.ஸ்கேன் எடுக்க பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் சி.டி. ஸ்கேன் எடுக்க நீண்டநேரம் காத்து இருந்தாலும் மறுநாள் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வகைப்படுத்துதல் மையம்

கொரோனா முதல் அலையின்போது காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் திறக்கப்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை செய்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதா?, சிகிச்சை மையத்துக்கு அனுப்புவதா?, ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதா? என அவர்களுக்கு உள்ள கொரோனா பாதிப்பின் அளவை கொண்டு டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.

ஆனால் தற்போது காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் செயல்படவில்லை. இந்த பணிகள் ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் பணிகளுக்கு ஊழியர்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் கூடுதலாக இந்த பணியும் தரப்பட்டு உள்ளது.

மற்றவர்களுக்கும் பரவும் அபாயம்

ஏற்கனவே குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வருபவர்கள், பிரசவத்துக்கு வருபவர்கள், கொரோனா காய்ச்சல் வார்டு, கொரோனா பரிசோதனை செய்பவர்கள் என கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்தநிலையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு தினமும் வருவதால் மற்ற சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் கொரோனா நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை தடுக்க மீண்டும் காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளை வகைப்படுத்தும் சிகிச்சை மையத்தை திறக்க வேண்டும். குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, அரசு காசநோய் ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Next Story