ரெம்டெசிவிர் மருந்தை விற்ற திருவண்ணாமலை அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் கைது.டாக்டருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் பரபரப்பு தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார். இதில் டாக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை
கள்ளச்சந்தையில் விற்பனை
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் கொேரானா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த மருந்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் விக்னேஷ் (வயது 47) என்பவரிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கியது தெரியவந்தது.
தற்காலிக ஊழியர் கைது
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு தற்காலிக ஊழியர் விக்ேனஷை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரிடம் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினமே சென்னை தாம்பரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், சென்னையில் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்காலிக ஊழியர் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
டாக்டருக்கும் தொடர்பு
விசாரணையில் இவருக்கு மருந்து தொடர்பாக எந்த விவரமும் தெரியாது, அதிகாரிகள் சொல்லும் வேலையை மட்டுமே செய்து வந்துள்ளார். எனவே இவர் தனியாக மருந்தை வெளியில் எடுத்து வந்து விற்றிருக்க வாய்ப்புகள் குறைவு. இவரது பின்னணியில் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் அல்லது உயர் அதிகாரிகள் யாரேனும் இருக்க வேண்டும். தீவிர விசாரணைக்கு பின்னரே யாரெல்லாம் இதில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது தெரியவரும்.
தற்போது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் இதில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பலர் சிக்க வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சென்னையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story