தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்ற திறப்பு விழா: இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அறிவுரை
இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.
கிருஷ்ணகிரி:
இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.
திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா மற்றும் பாதிக்கப்பட்ட, குழந்தை சாட்சிகளை பரிசோதிப்பதற்கான மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. காணொலி காட்சி மூலமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய நீதிமன்ற கட்டிடத்தை சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்வர வேண்டும்
சமுதாயத்தில் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். மக்களை பாதுகாக்க கூடிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஆகவே நீதித்துறையில் உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும். வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது நடுநிலையுடன் என்ன காரணத்திற்காக அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்கி தீர்ப்பு வழங்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் பரவும் வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வைரஸ் ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி வக்கீல் சங்க தலைவர் ஜி.டி. கருணாகரன், செயலாளர் கே.மார்க்ஸ், தேன்கனிக்கோட்டை வக்கீல் சங்க தலைவர் பிரவீன்குமார், செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசிம்மவர்மன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story