பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை


பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 April 2021 9:37 PM IST (Updated: 30 April 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பாலக்கோடு:
பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தக்காளி விளைச்சல் அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் தற்போது தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. 
இதனால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தினமும் 100 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இங்கிருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலை
பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையான தக்காளி தற்போது ரூ.4-க்கு விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டங்களிலேயே விட்டு உள்ளனர். சிலர் போதிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டி செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

Next Story