ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் தினமான நாளை வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் தினமான நாளை வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3 அடுக்கு பாதுகாப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனை முன்னிட்டு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி அறிவுறுத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில், 1 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 17 இன்ஸ்பெக்டர்கள், 66 சப்-இன்ஸ்பெக்டர்கள், 405 காவலர்கள் மற்றும் ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகியோர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவருக்கும் அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டு கொண்டதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த விதமான பொருட்களையும், கூர்மையான ஆயுதங்கள், குத்தூசி, பிளேடு போன்றவைகளையும் எடுத்து வரக்கூடாது.
வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை
முக கவசம் கண்டிப்பாக அனைவரும் அணிந்திருக்க வேண்டும். செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் வாக்கு எண்ணும் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது.
அன்றைய தினம் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெற்றிக் கொண்டாட்டங்களான ஊர்வலம், கூட்டம் கூடுதல், பட்டாசு வெடித்தல், தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Related Tags :
Next Story