கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 2,025 போலீசார் பாதுகாப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 2,025 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முடிவடைந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது தவிர கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இது மட்டுமின்றி வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதையும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
2025 பேர் பாதுகாப்பு
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் நாளை மறுநாள் (நாளை) வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையொட்டி அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 41 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 100 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார், துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என 2025 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே அன்று முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரக்கூடாது. மீறி வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதி அட்டையுடன் வர வேண்டும்.
மேலும் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஆகவே இதை முகவர்கள் உள்பட அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுபவர்களை கண்காணிக்க 425 போலீசார் பணியில் இருப்பார்கள் என்றார்.
இதையடுத்து கடலூர் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story