மீன், இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்
இன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் மீன், இறைச்சி கடைகள் அடைப்பு என்பதால் மீன், இறைச்சி வாங்குவதற்கு திண்டுக்கல்லில் மக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்:
மீன், இறைச்சி கடைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்படுகிறது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் வீடுகளில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் கட்டாயம் இடம்பெறும்.
ஆனால், முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமைகளில் மீன், இறைச்சியை மொத்தமாக வாங்கி வைத்து சமைத்து சாப்பிட்டனர்.
இதனால் சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் அபாயம் உள்ளது.
இதையடுத்து சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மக்கள் குவிந்தனர்
இது அசைவ பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், வேறுவழியின்றி வெள்ளிக்கிழமையே மீன், இறைச்சியை வாங்க முடிவு செய்தனர்.
இதற்கு வசதியாக மீன், இறைச்சி கடைகளில் நேற்று சிறப்பு விற்பனை நடந்தது.
இதனால் திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.
அதிலும் குறிப்பாக மாலை 4 மணிக்கு மேல் மக்கள் அதிக அளவில் வந்தனர்.
எனவே, கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மார்க்கெட்டுக்கு வெளியே சோலைஹால் சாலையின் இருபக்கங்களிலும் மீன் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது.
இந்த மீன் கடைகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து மீன் வாங்கினர்.
பெரும்பாலான மக்கள் 2 நாட்களுக்கு தேவையான மீன்களை வாங்கினர்.
இதனால் இரவு 9 மணி வரை மீன் விற்பனை களைகட்டியது.
இதுதவிர ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் விற்பனை இரவு வரை நடைபெற்றது.
Related Tags :
Next Story