7 பஸ்கள், 5 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம்


7 பஸ்கள், 5 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 April 2021 10:14 PM IST (Updated: 30 April 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறிய 7 பஸ்கள், 5 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் மேற்கொள்ளவும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும், ஆட்டோக்களில் டிரைவரை தவிர்த்து 2 பேரும், ஷேர் ஆட்டோக்களில் டிரைவரை தவிர்த்து 4 பேரும், வாடகை கார்களில் டிரைவரை தவிர்த்து 3 பேரும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டின்படி விழுப்புரத்தில் வாகனங்கள் முறையாக இயக்கப்படுகின்றதா? என்று நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அபராதம்

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்த 5 தனியார் பஸ்களிலும், திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் வந்த 2 தனியார் பஸ்களிலும் பயணிகள் இருக்கைகளிலும், நின்றபடியும் பயணம் செய்தனர். இதை கண்டறிந்த அதிகாரிகள் அந்த 7 பஸ்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அதுபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் விதியை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற 5 ஷேர் ஆட்டோக்களை அதிகாரிகள் நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். 
அதோடு இனிமேலும் தொடர்ந்து விதிகளை மீறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story