ரூ 4 கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
கிணத்துக்கடவு- சிங்கையன்புதூர் இடையே ரூ.4 கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு- சிங்கையன்புதூர் இடையே ரூ.4 கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
கிணத்துக்கடவில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் கேரள எல்லை உள்ளது. கோவை மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கிணத்துக்கடவில் இருந்து சிக்கலாம் பாளையம், சிங்கையன் புதூர், மூலக்கடை, சொக்கனூர், வீரப்ப கவுண்டனூர் வழியாக கேரளாவிற்கு சென்று வருகின்றன.
இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததாலும், இந்த சாலை குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.4 கோடியில் அகலப்படுத்தும் பணி
அதன்படி கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி முதல் சிங்கையன் புதூர் வரை உள்ள சாலையை, இருவழிச்சாலையாக மாற்ற ரூ.4 கோடியே 18 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
அதுபோன்று காதருத்தான்மேடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததால், அங்குள்ள மேடான பகுதியை அகற்றிவிட்டு சாலை அமைக்கும் பணியும் வேகமாக நடந்தது. தற்போது அந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவில் முடிந்துவிடும்
கிணத்துக்கடவில் இருந்து கேரளா மாநில எல்லைக்கு 14 கி.மீ. தூரம் உள்ளது. இந்த சாலையில் 5 கி.மீ. தூரத்துக்கு அகலப்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து விடும்.
மீதம் உள்ள 9 கி.மீ. தூரம் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான நிதி இன்னும் வரவில்லை. நிதி வந்ததும் பணிகள் தொடங்கி விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story