மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தயார் + "||" + Counting Center

கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தயார்

கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தயார்
கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது. இதனால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
வாக்குஎண்ணும் மையம்
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி (ஏப்ரல் மாதம்) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிவுற்றது. இந்த தேர்தலில் கரூர் , அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு முறையில் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
தடுப்புகள் அமைப்பு
இதையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையம் வரை கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.கல்லூரி நுழைவு வாயில்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு சோதனை சாவடிகள், மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. 
போலீசார் குவிப்பு
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அலுவலர்கள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் வாக்கு எண்ணும் மையத்தில் ஊடக மையம வேட்பாளர்களின் முகவர்களுக்கான அறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
சான்று பெற்று வரவேண்டும்
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தவறாமல் கொரோனா தொற்று இல்லை என்று சான்று பெற்று வரவேண்டும்.மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் காலை 7 மணிக்குள் வர வேண்டும் அவர்களை தொற்று இல்லை என மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
முககவசம்
மேலும், அவர்களின் உடல் வெப்பநிலை தர்மல் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயமாக அடையாள அட்டை, முககவசம், கையுறை கட்டாயம் அணிந்து வர வேண்டும். மேலும் செல்போன் மற்றும் கூர்மையான பொருட்கள் ஏதும் எடுத்து வர அனுமதி இல்லை.நாளைமறுநாள் காலை தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தபால் வாக்குகள் எண்ணுவதற்கும் தனி அறைகளும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றிலும் துணை ராணுப்படை வீரர்கள் 75 பேரும், சிறப்பு காவல் படையினர் 90 பேரும், போலீசார் 700 பேரும்,ஊர்காவல் படையினர் 200 பேர் என மொத்தம் 1065 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.