என் மனைவியின் செயலால் 2 மகள்களையும் பறிகொடுத்துவிட்டேன்-இளையான்குடி டிரைவர் உருக்கம்


என் மனைவியின் செயலால் 2 மகள்களையும் பறிகொடுத்துவிட்டேன்-இளையான்குடி டிரைவர் உருக்கம்
x
தினத்தந்தி 30 April 2021 6:26 PM GMT (Updated: 30 April 2021 6:26 PM GMT)

என் மனைவியின் செயலால் 2 மகள்களையும் பறிகொடுத்து விட்டேன் என்று இளையான்குடி டிரைவர் உருக்கத்துடன் கூறினார்.

இளையான்குடி,
என் மனைவியின் செயலால் 2 மகள்களையும் பறிகொடுத்து விட்டேன் என்று இளையான்குடி டிரைவர் உருக்கத்துடன் கூறினார்.

லாரி டிரைவர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30). இவருக்கும் இளையான்குடியை அடுத்த சாலைக்கிராமம் அருகே உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் (35) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிருந்தா (7) மற்றும் பிரசந்தா (4) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வியின் தம்பி முருகன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.என்.புரத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பிரபு தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பின்னர் மனைவியிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரபு பிரிந்து சென்றார். தமிழ்செல்வி தனது குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

2 மகள்களை பறிகொடுத்து விட்டேன்

இந்த நிலையில் குயவர்பாளையம் கிராமத்தில் இருந்த பிரபுவிடம் சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி இச்சம்பவம் குறித்து விசாரித்தார். அப்போது பிரபு அவரிடம் கூறியதாவது:-
8 ஆண்டுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவேன். இதனால் எனக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சொந்த ஊருக்கு வந்து விட்டேன். இந்த நிலையில் 2 குழந்தைகளை கொன்று விட்டு எனது மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனது மனைவி செயலால் 2 மகள்களை பறிகொடுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் பல்லடம் சென்று அவரது குழந்தைகளின் இறுதி சடங்கில் பங்கேற்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று குயவர்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story