திசையன்விளையில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
திசையன்விளையில் பெண்ணிடம் 9 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
திசையன்விளை, மே:
திசையன்விளை காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் கதிரேசன். பழைய இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி கீதா (வயது 47). இவர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, காந்தி தெரு வழியாக வீ்ட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்தபடி 2 மர்மநபர்கள் வந்தனர். கீதாவுக்கு அருகில் வந்ததும், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கீதாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். உடனே கீதா கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்மநபர்கள் அந்த நகையுடன் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story