தயார்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்


தயார்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்
x
தினத்தந்தி 1 May 2021 12:59 AM IST (Updated: 1 May 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கும்பகோணம்;
கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர். 
வாக்கு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்து முடிந்தவுடன், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
14 மேஜைகளில்
வாக்கு எண்ணிக்கையை குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் விமல் ஆகியோர் கூறியதாவது:-
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 378 வாக்குச்சாவடி மையங்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 72 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் 4 மேஜைகளில் எண்ணப்படும். பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எந்திரத்திலிருந்து 14 எந்திரங்களை தனித்தனி அலுவலர்கள் எடுத்து வந்து 14 மேஜைகளில் வைப்பார்கள். ஒரு மேஜைக்கு ஒரு உதவியாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண்கண்காணிப்பாளர் என 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
முதலில் ஏஜெண்டுகள் முன்னிலையில் ஒவ்வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் வெளிப்புறத்தில் உள்ள 2 சீல்களும் பிரிக்கப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட் திறக்கப்படும். அதன் பிறகு ரிசல்ட் என்ற பச்சை பொத்தானில் உள்ள சீல் அகற்றப்பட்டு அழுத்தப்படும். அப்போது வேட்பாளர்களுக்கும், நோட்டாவுக்கும் ஒவ்வொரு எந்திரத்தில் பாதிவாகி உள்ள ஓட்டுகளின் எண்ணைக்கை தெரியவரும். இதே போல 27 சுற்றுகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதைப்போல திருவிடை மருதூர், பாபநாசம் ஆகிய தொகுதிகளின் ஓட்டுகளும் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

Next Story