4 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை


4 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 2:01 AM IST (Updated: 1 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிக்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்:

நாளை வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைகள் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர், போலீசார், ஆயுதப்படை போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்பட உள்ளன.
இதில் தபால் வாக்குகள் அரியலூர் தொகுதிக்கு 4 மேஜைகளிலும், ஜெயங்கொண்டம் தொகுதிக்கு 6 மேஜைகளிலும் எண்ணப்படுகின்றன. பின்னர் அந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தலா 14 மேஜைகளில் வைத்து, 27 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் அலுவலர்களின் பணிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
வாக்கு எண்ணும் மையத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 400 போலீசாரும், 72 மத்திய துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அரசு அலுவலர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர், ஊடகத்தினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி மையத்திலும் வாகனத்தை நிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு எந்த ஒரு வெற்றிக் கொண்டாட்டமும், ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் வெற்றி சான்றிதழை பெற வேட்பாளருடன் 2 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையமான குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறைகள் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மத்திய துணை ராணுவ படை வீரர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தபால் ஓட்டுகள்
இதில் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு தனி அறையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பெரம்பலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், சப்-கலெக்டருமான பத்மஜாவும், குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் 4 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கு 25 சதவீத இருப்புடன் ஒரு மேஜைக்கு தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், 2 உதவியாளர்கள் என 36 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளனர்.
14 மேஜைகளில்...
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் வைத்து, 31 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இதேபோல் குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் வைத்து, 28 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கு ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என மொத்தம் 102 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணியை கண்காணிக்க அந்த அறையில் 4 கண்காணிப்பு கேமராக்களும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியை கண்காணிக்க அந்த அறைகளில் 14 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக தலா 24 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
193 கண்காணிப்பு கேமராக்கள்
வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரத்தை அறிவிப்பு பலகையில் எழுதுவார்கள். இவை தவிர ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும்.
பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்ைத சுற்றிலும் மொத்தம் 193 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story