லாரி மோதியதில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது; கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேர் கவலைக்கிடம்
பெங்களூரு அருகே, லாரி மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே, லாரி ேமாதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தலகூர் எடஹள்ளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆம்புலன்ஸ் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
லாரி மோதிய வேகத்தில் ஆம்புலன்சில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்சில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று ஆமபுலன்சில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் ஆம்புலன்சில் இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொரோனா நோயாளிகள்
இந்த விபத்து குறித்து டாபஸ்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தீக்காயம் அடைந்தவர்கள் துமகூருவை சேர்ந்த அசினா(வயது 50), ஷபினா(45), சல்மான்(20), ஆம்புலன்ஸ் டிரைவர் சாதிக்(20), இன்னொரு சாதிக்(20) என்பது தெரியவந்தது. இவர்களில் அசினா, ஷபினா, சல்மான் ஆகியோர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.
அவர்களை சிகிச்சைக்காக துமகூருவில் இருந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு சாதிக்கும், அவரது நண்பர் இன்னொரு சாதிக்கும் ஆம்புலன்சில் அழைத்து வந்ததும் அப்போது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. அவர்கள் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து டாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story