கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் டீக்கடைகள் திறக்க தடை கலெக்டர் உத்தரவு
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறுஅறிவிப்பு வரும் வரை டீக்கடைகளை திறக்க தடை விதித்து கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
தேனி :
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும், அங்கேயே நின்றோ, அமர்ந்தோ டீ குடிக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. ஆனாலும் மாவட்டத்தில் டீக்கடைகள் சில இடங்களில் செயல்பட்டு வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து டீக்கடைகளையும் மூடவும், மறு உத்தரவு வரும் வரை டீக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சிகள் மண்டல இயக்குனர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோருக்கு கலெக்டர் ஒரு செயல்முறை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவினர் நடத்திய கள ஆய்வில் டீக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் இந்நோய் பரவ வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
டீக்கடைகளுக்கு தடை
எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு விதிமீறல்கள் செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டதில் 151 கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டீக்கடைகளும் செயல்பட தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். நோய்த்தொற்று பரவும் தன்மை குறைவதை பொறுத்து படிப்படியாக இந்த தடை விலக்கிக்கொள்ள உத்தரவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story