தூத்துக்குடியில் இறைச்சி கடைகள் மூடல்
தூத்துக்குடியில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடி:
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடியில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன.
2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல் படுத்தியது.
முழு ஊரடங்கையொட்டி இறைச்சி கடை, மீன்கடை, காய்கறி கடைகள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.
இதனால் பொதுமக்கள் முழு ஊரடங்கு முந்திய நாளில் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கி வைத்து கொள்வார்கள். கடந்த வாரம் முழு ஊரடங்கின் போது அதற்கு முந்தைய நாளில் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்ட மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இறைச்சி கடைகள் மூடல்
ஆனால் கொரோனா பயத்தால் அதிகமான பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வரவில்லை. இதனால் தூத்துக்குடி வ.உ.சி. காய்கறி மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை, மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது.
மேலும் இறைச்சி கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என அறிவுறுத்தபட்டிருந்தது. அதன்படி வழக்கமாக திறக்கப்படும் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகள் அடைத்திருப்பது தெரியாமல் இறைச்சி, மீன் வாங்க வந்த பலர் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Related Tags :
Next Story