50 இறைச்சி கடைகள் மூடப்பட்டன


50 இறைச்சி கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 1 May 2021 9:17 PM IST (Updated: 1 May 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

நாகை-நாகூர் பகுதிகளில் நேற்று 50 இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன.

நாகப்பட்டினம்:
நாகை-நாகூர் பகுதிகளில் நேற்று 50 இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் முந்தைய நாளான சனிக்கிழமை அன்று அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க சனிக்கிழமையும், இறைச்சி கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
 சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய 2 நாட்கள் இறைச்சி கடைகள்  மூடப்படும் என்பதால் நாகையில் நேற்று முன்தினம் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பொதுவாக நாகையில் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலான இறைச்சி கடைகள் மூடியே இருக்கும். ஆனால் சனிக்கிழமை இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் நேற்றுமுன்தினம் மதியத்துக்கு மேல் இறைச்சி கடைகளுக்கு வந்த அசைவ பிரியர்கள் கடை உரிமையாளர்களுக்கு போன்செய்து வரவைத்து இறைச்சிகளை வாங்கி சென்றனர். 
50 இறைச்சி கடைகள் மூடல்
இந்த நிலையில் நேற்று நாகையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசின் உத்தரவை மீறி கடைகளில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திறந்திருந்த சில இறைச்சி கடைகளை உடனடியாக மூட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். 
 நாகை-நாகூர் நகர பகுதிகளை சுற்றியுள்ள 50 இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன.  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் எங்களுக்கு வியாபாரம் நடக்கும். ஊரடங்கை காரணம் காட்டி முக்கியமான 2 நாட்களில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளதாக  இறைச்சி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Next Story