கடலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை


கடலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 4:06 PM GMT (Updated: 1 May 2021 4:06 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கடலூர், 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,001 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 135 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களான 21 லட்சத்து 47 ஆயிரத்து 295 பேரில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 415 ஆண்களும், 8 லட்சத்து 42 ஆயிரத்து 909 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 88 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த வாக்குப்பதிவு 76.77 சதவீதமாகும்.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் அனைத்தும் பத்திரமாக மாவட்டத்தில் உள்ள கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக காலை 7 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் அந்தந்த சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளின் சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சரியாக 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும்.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு மேஜை, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இன்னொரு மேஜையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மீதமுள்ள 14 மேஜைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறும். ஒரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர் வீதம் இருப்பார்கள். ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுவதோடு, வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட உள்ளது.

கொரோனா சான்றிதழ்

அதுபோல் வாக்கு எண்ணும் பணியை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள், மத்திய அரசு பணியாளர்கள், காவல்துறையினர் உள்பட 3,600 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பித்தாலும் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதில் 98.6 டிகிரிக்கு குறைவாக வெப்பம் இருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் வெப்பம் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2,025 போலீசார் பாதுகாப்பு

மேலும் இந்த தேர்தலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் திட்டக்குடி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 22 சுற்றுகளும், விருத்தாசலம், சிதம்பரம் தொகுதிகளுக்கு தலா 26 சுற்றுகளும், கடலூர், புவனகிரி, பண்ருட்டி தொகுதிகளுக்கு தலா 25 சுற்றுகளும், குறிஞ்சிப்பாடிக்கு 24 சுற்றுகளும், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறவும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் 9 தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 2,025 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story