2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: ஒரே நாளில் ரூ.9½ கோடிக்கு மது விற்பனை


2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: ஒரே நாளில் ரூ.9½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 1 May 2021 4:36 PM GMT (Updated: 1 May 2021 4:36 PM GMT)

2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியினால் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.9½ கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

விழுப்புரம், 


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் அந்த காலக்கட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக மது விற்பனை செய்யப்படும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
 
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மதுபிரியர்கள், மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன.

இதனால் ஏமாற்றமடையும் மதுபிரியர்கள் முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்றே பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

2 நாட்கள் விடுமுறை

இந்த சூழலில் நேற்று மே தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்காது.  இவ்வாறு சனி, ஞாயிறு என 2 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் நேற்று முன்தினம் மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் மது விற்பனையும் அதிகரித்தது.

மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதல்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 124 டாஸ்மாக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 104 டாஸ்மாக் கடைகள் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 228 டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள், சாரை, சாரையாக குவிந்தனர். 

இவர்கள் கொரோனா பரவலை மறந்ததோடு மட்டுமின்றி சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் அவற்றை காற்றில் பறக்க விட்டுவிட்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனர். ஒரு சில கடைகளில் மதுபிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு 2, 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாகவும் வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தை சேர்ந்த மதுபிரியர்களும் மது வகைகளை வாங்க விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு படையெடுத்தனர். இதனால் இங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.


ரூ.9½ கோடிக்கு மது விற்பனை

அதன்படி பிராந்தி, விஸ்கி மதுபான வகைகள் 13,005 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 6,271 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.9 கோடியே 66 லட்சத்து 39 ஆயிரத்து 40-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

Next Story