தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறப்போவது யார்? இன்று முடிவு தெரியும்
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 74 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் வெற்றி பெறப்போவது யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 74 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன், தி.மு.க. வேட்பாளர் மகாராஜன், அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் உள்பட மொத்தம் 20 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 772 வாக்காளர்கள். அதில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 152 பேர் வாக்களித்தனர்.
பெரியகுளம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன், தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார், அ.ம.மு.க. வேட்பாளர் டாக்டர் கதிர்காமு உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 84 ஆயிரத்து 617 வாக்காளர்கள். அதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 68 பேர் வாக்களித்தனர்.
யாருக்கு வெற்றி?
போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அ.ம.மு.க. வேட்பாளர் முத்துசாமி உள்பட மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 604 வாக்காளர்கள். அதில் 2லட்சத்து 11 ஆயிரத்து 808 பேர் வாக்களித்தனர்.
கம்பம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன், அ.ம.மு.க. வேட்பாளர் சுரேஷ் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 645 வாக்காளர்கள். அதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 236 பேர் வாக்களித்தனர்.
4 தொகுதிகளிலும் வெற்றி பெறுபவர்கள் யார்? பெருவாரியான மக்கள் யாரை தேர்வு செய்து இருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில் இன்று கிடைத்து விடும். தேர்தல் முடிவை எதிர்நோக்கி அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஆவலுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story