மாயமான 11 குமரி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
நடுக்கடலில் கப்பல் மோதியதில் மாயமான 11 மீனவர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். அவர்களை குடும்பத்தினர் கட்டித்தழுவி வரவேற்றனர்.
புதுக்கடை:
நடுக்கடலில் கப்பல் மோதியதில் மாயமான 11 மீனவர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். அவர்களை குடும்பத்தினர் கட்டித்தழுவி வரவேற்றனர்.
மீனவர்கள் மாயம்
குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த கைராசன் மகன் ஜோசப் பிராங்ளினுக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது. இந்த படகில் ஜோசப் பிராங்ளின், அதே ஊரை சேர்ந்த பிரெடி, ஏசுதாஸ், ஜான், சுரேஷ், ஜெபிஷ், விஜீஷ், ஜெனிஸ்டன், ஜெகன், ஷெட்ரிக் ராஜ், மார்பின் ஆகிய 11 பேரும் கடந்த 9-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
கடந்த 24-ந் தேதி அன்று காலையில் கோவா கடல் பகுதியில் ஜோசப் பிராங்ளின் சென்ற விசைப்படகின் மேல் பகுதி உடைந்து கிடந்தது. இதில் பயணம் செய்த 11 மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது.
குடும்பத்தினர் சோகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆழ்கடலில் மீன்பிடித்த குமரி மீனவர்கள் அங்கு விரைந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கப்பல் மோதியதில் படகு உடைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பங்குதந்தை ரிச்சர்டு மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் சேர்ந்து மீனவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
3 நாட்களாகியும் மாயமான மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால், மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். கப்பல் மோதியதில் கடலுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.
பத்திரமாக இருப்பதாக தகவல்
தொடர்ந்து சோகத்திலேயே இருந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, 3 நாட்களுக்கு பிறகு அதாவது 28-ந் தேதி காலையில் இனிப்பான செய்தி வந்தது.
மாயமான மீனவர்கள் சேட்லைட் போன் மூலம், தங்களுடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தாங்கள் பத்திரமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். வள்ளவிளை கிராம மக்களும் சோகத்தில் இருந்து மீண்டு பூரிப்படைந்தனர்.
துறைமுகம் வந்தனர்
மேலும் 420 நாட்டிக்கல் கடல் தொலைவில் இருந்து கரைக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்களை 72 கடல் மைல் தொலைவில் இருந்து கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
நேற்று மாலையில் கரை திரும்பிய 11 மீனவர்களையும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., விஜய் வசந்த், தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், வள்ளவிளை பங்குதந்தை ரிச்சர்டு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், இன்ஸ்பெக்டர் அருள்ரோஸ் சிங், ஜஸ்டின் ஆண்டனி மற்றும் திரளானோர் வரவேற்றனர். 11 மீனவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கட்டித்தழுவி வரவேற்றனர்
இந்த வரவேற்பை பெற்ற மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் சொந்த ஊருக்கு சென்ற 11 மீனவர்களை பார்த்ததும் அவர்களுடைய குடும்பத்தினர் கட்டித்தழுவியும், ஆனந்த கண்ணீர் வடித்தும் வரவேற்றனர்.
ஒட்டுமொத்த கிராம மக்களும் அவர்களை உற்சாகத்துடன் அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உயிர் பிழைத்தது எப்படி?
மேலும் கப்பல் மோதியதில் உயிர் பிழைத்தது குறித்து மீனவர்கள் கூறுகையில், 23-ந் தேதி இரவு விசைப்படகில் தூங்கி கொண்டிருந்த போது கப்பல் மோதியது. இதில் விசைப்படகின் மேற் பகுதி சேதமடைந்து விட்டது. மோதிய கப்பல், எந்த நாட்டுக்கு சொந்தமானது என்று தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டோம். உடைந்த படகை பிடித்தபடி ஒருவழியாக தப்பினோம். பின்னர் சேட்லைன் போன் மூலம் நடந்த விவரத்தை தெரிவிக்க முயன்றோம். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
28-ந் தேதி தான் சேட்லைட் போனால் தொடர்பு கொள்ள முடிந்தது. இதற்கிடையே நாங்கள், கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற தகவல் பரவியதால் குடும்பத்தினரும், சொந்த ஊர் மக்களும் சோகத்தில் இருந்தனர். தற்போது பத்திரமாக உடைந்த படகு மூலம் சொந்த ஊருக்கு திரும்பியதை பார்த்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story