நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை, மே:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
அப்போது பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இன்று ஓட்டு எண்ணிக்கை
இந்த ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறை அருகில் உள்ள அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, உள்ளே ஓட்டு எண்ணுவதற்கு வசதியாக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.
முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து சரிபார்த்து எண்ணப்படுகிறது. அதை தொடர்ந்து முதல் சுற்றுக்கு பாதுகாப்பு அறையில் இருந்து வரிசைப்படி 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வரிசையாக மேஜைகளில் வைக்கப்படுகிறது. முகவர்கள் முன்னிலையில் அந்தந்த எந்திரங்களின் சீல் அகற்றப்பட்டு திறந்து, அதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவாகி இருக்கும் ஓட்டுகள் விவரம் எந்திரத்தின் திரையில் காண்பிக்கப்பட்டு, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்று வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவலையொட்டி வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கூடுதல் எந்திரங்களில் வாக்குகள் எண்ண வேண்டியநிலை உள்ளது. எனவே வழக்கத்தைவிட ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு கூடுதல் நேரமாகும்.
எத்தனை சுற்றுகள்
இதில் நெல்லை தொகுதியில் 30 சுற்றுகளும், அம்பை தொகுதியில் 26 சுற்றுகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 28 சுற்றுகளும், நாங்குநேரி தொகுதியில் 29 சுற்றுகளும், ராதாபுரம் தொகுதியில் 27 சுற்றுகளும் எண்ணப்படுகிறது.
இறுதியில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ள சேமிப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி ஏற்கனவே போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணிக்கு மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இன்று காலை 5 மணிக்கு பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த உடன் முகவர்களை சரிபார்த்து உள்ளே அனுப்புவது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் எந்த பிரச்சினை ஏற்படாமலும் தகுந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்று செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அரசு என்ஜினீயரிங் கல்லூரியை சுற்றிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், வாகன நிறுத்தும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
இதுதவிர வெற்றி கொண்டாட்டங்களை தடுக்கவும், மற்ற பகுதிகளில் தேர்தல் வெற்றி-தோல்வி தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story