சேலம் மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: 10 முகவர்கள் கொரோனாவால் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: 10 முகவர்கள் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 8:01 PM GMT (Updated: 1 May 2021 8:01 PM GMT)

சேலம் மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி 10 முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி 10 முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
இன்று வாக்குப்பதிவு
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, ஏற்காடு, ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று அந்த மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவரும் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
10 முகவர்களுக்கு கொரோனா
அதன்படி, மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் 2,480 முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 10 முகவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூடுதலான முகவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதனால் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பதிலாக மற்றவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களாக பணியாற்றுவார்கள்.

Next Story