4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பெரம்பலூர்:
இன்று வாக்கு எண்ணிக்கை
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 428 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குரும்பலூரில் உள்ள, பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 388 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட உள்ளன. இதற்காக அந்த வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அலுவலர்கள், வேட்பாளர், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர் அடையாள அட்டையுடன், முககவசம், கையுறை அணிந்து வர வேண்டும். அவர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்று வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும். அப்போது 98.6 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அனைவரையும் போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். இதற்காக சோதனையிட மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த பணியில் அலுவலர்கள் 186 பேர் ஈடுபட உள்ளனர். மேலும் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கு தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு பெரம்பலூர் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 31 சுற்றுகளாகவும், குன்னம் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 28 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அரியலூர்- ஜெயங்கொண்டம் தொகுதிகள்
இதேபோல் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 376 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 377 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட உள்ளன. இதனால் அந்த வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் முதலில் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாக்கு எண்ணும் பணிகளில் அலுவலர்கள் 188 பேர் ஈடுபட உள்ளனர்.
தபால் வாக்குகள் எண்ண அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கு தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு தலா 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.
பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதுவார்கள். இதைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர்கள், அவர்களுக்கான முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும் வேட்பாளர் சான்றிதழ் வாங்க, 2 பேரை அழைத்து செல்லலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், அந்த கல்லூரி நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரை கம்புகளால் தடுப்புகள், இருப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நுழைவு வாயில்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story