சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 May 2021 1:52 AM IST (Updated: 2 May 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்கள்
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டசபை தொகுதிகளில் 4,280 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும், சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 3 தொகுதிகளுக்கு அம்மாபேட்டை ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியிலும், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளுக்கு சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனத்திலும், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 2 தொகுதிகளுக்கு தலைவாசலில் உள்ள ஸ்ரீ மாருதி கல்வி நிறுவனத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராமன் அடிக்கடி வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் முழுவீச்சில் நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ண 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது, மாநகரில் உள்ள கருப்பூர் மற்றும் அம்மாபேட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் கமிஷனர், போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீசார் ஒத்திகை
மேலும் புறநகரில் உள்ள தலைவாசல், சங்ககிரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயில், வளாகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது எப்படி? என்பது குறித்து நேற்று போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.
முழு ஊரடங்கு
இதனிடையே முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் சிலைகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Next Story