திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி திடீரென நிறுத்தம்


திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி திடீரென நிறுத்தம்
x
தினத்தந்தி 1 May 2021 8:46 PM GMT (Updated: 1 May 2021 8:46 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. மேலும் திட்டமிட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. மேலும் திட்டமிட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

நாடு முழுவதும் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்பதிவு கோவின் இணைய தளத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

திருச்சி மாவட்டத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். தேவையான தடுப்பூசிகள் நேற்று கையிருப்பு இல்லாததால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கண்ட வயதினருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட வில்லை.

தனியார் ஆஸ்பத்திரிகளில் நிறுத்தம்

அதுபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.150-க்கு வழங்கப்பட்டது. அவர்கள் பின்னர் பொது மக்களுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்து செலுத்தி வந்தனர்.

திருச்சியில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் (மே) முதல் தடுப்பூசி விலை உயர்த்தப்படும் என்ற காரணத்தினால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்தினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் போட்டு முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பல தனியார் ஆஸ்பத்திரிகள் விலை உயர்வு காரணமாக தடுப்பூசி போட்டு முடிக்காமல் இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

திரும்ப பெறப்பட்டது

இதையடுத்து நேற்றைய தினம் மாவட்ட சுகாதாரத்துறை தனியார் ஆஸ்பத்திரிகளில் இருப்பு வைத்திருந்த 500 டோஸ் தடுப்பூசி மருந்துகளை திரும்ப பெற்றது. இனி தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலைக்கு மத்திய அரசிடம் இருந்து, நேரடியாக தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

மேலும் மாநில சுகாதாரத்துறை மூலம் அடுத்த அறிவிப்பு வரும்வரை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி மருந்து வினியோகம் செய்யப்பட மாட்டாது எனவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மற்றபடி 45 வயதுக்கு கீழ் உள்ள ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் உரிய சான்றிதழுடன் வந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

2-ம் கட்ட தடுப்பூசிக்கு முக்கியத்துவம்

திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரை தற்போது இருப்பு உள்ளது. இதில் 2,000 டோஸ் மருந்து மட்டுமே கோவேக்சின் உள்ளது. ஆகவே கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 15 இடங்களில் கோவேக்சின் போடப்பட்ட நிலையில் நேற்று திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய 2 இடங்களில் மட்டுமே கோவேக்சின் போடப்பட்டது. மற்ற இடங்களில் வழக்கம் போல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் பற்றாக்குறையாக இருப்பதால் 2-ம் கட்ட தடுப்பூசிக்கே முக்கியத்துவம் கொடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Next Story