ஊஞ்சலூர் அருகே பயங்கரம்: கம்மல், செல்போன் திருடிய தொழிலாளி மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை- 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
ஊஞ்சலூர் அருகே கம்மல், செல்போன் திருடிய தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொலை செய்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே கம்மல், செல்போன் திருடிய தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொலை செய்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள ஆட்டுக்காரன்புதூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 53). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வாவிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (19). இவருடைய மனைவி ஜெயந்தி (19). இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதமாக சத்தியமூர்த்தியின் தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய கூலி வேலை செய்து வந்தார்கள்.
சத்தியமூர்த்தியின் தாயார் சம்பூரணம் (75). இவர் சற்று மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி கணேஷ், சம்பூரணம் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோட்டையும், ஒரு செல்போனையும் திருடி மனைவியிடம் கொடுத்து வாவிதோட்டத்துக்கு அனுப்பிவைத்துவிட்டதாக தெரிகிறது. மறுநாள் அவரும் ஊருக்கு சென்றுவிட்டார்.
மரத்தில் கட்டிவைத்து அடி
சம்பூரணத்தின் தோடும், வீட்டில் இருந்த செல்போனும் திருட்டுப்போனதை அறிந்த சத்தியமூர்த்தி கணேஷ்தான் திருடி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவரை செல்போனில் அழைத்து ஈரோடு வரச்சொன்னார். அதன்படி கடந்த 29-ந் தேதி கணேஷ் ஈரோடு வந்தார். அவருக்காக காரில் காத்திருந்த சத்தியமூர்த்தி அவரை ஏற்றிக்கொண்டு ஆட்டுக்காரன்புதூர் சென்றார். பின்னர் தன்னுடைய தோட்டத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் கணேசை கட்டி வைத்து அவரும், அவருடைய நண்பர்களும், அடியாட்களும் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.
அப்போது கணேஷ் தான் திருடியதை ஒப்புக்கொண்டார்.
கெஞ்சல்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கணேசின் அண்ணன் சதீசுக்கு (25) போன் செய்து, உன் தம்பி என் அம்மாவின் தோடு, செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டான். அதனால் அவனை பிடித்து வைத்துள்ளேன். எனவே நீ தோடு, செல்போன் மற்றும் உன் தம்பி வாங்கிய முன்பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை கொடுத்துவிட்டு கூட்டிச்செல் என்று கூறியுள்ளார்.
அதன்படி சதீஷ், அவருடைய தாயார் விஜயா, கணேசின் மனைவி ஜெயந்தி ஆகியோர் திருடிச்ெசன்ற நகை, செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை சத்தியமூர்த்தியிடம் கொண்டுவந்து கொடுத்து கணேசை அடிக்காதீர்கள், விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி உள்ளார்கள்.
சாவு
அதன்பின்னர் சத்தியமூர்த்தி மரத்தில் கட்டிவைத்திருந்த கணேசை விடுவித்து சதீசிடம் ஒப்படைத்துள்ளார். பிறகு சதீஷ் கணேசை மோட்டார்சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டார். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அண்ணன்மார் கோவில் பஸ்நிறுத்தம் வந்தபோது, கணேஷ் வாந்தி வருவதாக அண்ணனிடம் கூறியுள்ளார். உடனே சதீஷ் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். வண்டியில் இருந்து இறங்கிய கணேஷ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப்போன சதீஷ் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் சம்பவ இடம் வந்தது. அதில் வந்த மருத்துவ உதவியாளர் பரிசோதித்து பார்த்துவிட்டு, கணேஷ் இறந்து விட்டதாக கூறினார்.
விசாரணை
இதைக்கேட்டு கதறி துடித்த ஜெயந்தி, விஜயா, சதீஷ் ஆகியோர் மலையம்பாளையம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார்கள்.
தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார்கள். அப்போது மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியதில்தான் கணேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது.
8 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை தாக்கியதாக சத்தியமூர்த்தி, இவருடைய நண்பர்களான ஈரோடு கிழக்கு பட்டக்காரர் தெருவை சேர்ந்த மோனீஷ் (24), இவருடைய தாயார் கவிதா (44), தேவம்பாளையத்தை சேர்ந்த ராஜாகுமார் (43), குள்ளக் கவுண்டன்புதூரை சேர்ந்த வடிவேல் (50), சிவகிரி அம்மன் கோவிலை சேர்ந்த சின்னுசாமி (47), அனிதா (29), வெள்ளக்கோவிலை சேர்ந்த மைக்கேல்ராஜ் (25) ஆகிய 8 பேரை கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அனைவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி 8 பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டார்கள்.
தோடு, செல்போனை திருடிய தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story