பருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


பருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 11:33 PM IST (Updated: 2 May 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரடாச்சேரி, 

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு கோடைப்பயிராக பருத்தி, உளுந்து, எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். திருவாரூர் மாவட்டத்தில் குறைவான பரப்பிலேயே பருத்தி சாகுபடி செய்வர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் என்கண், காப்பனாமங்கலம், காவனூர் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய அளவில் பயிர் காப்பீட்டு திட்டம் மார்ச் மாதம் 30-ந் தேதி நிறைவடைந்தது.

காப்பீடு

ஆனால் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நெற்பயிர் அறுவடை நிறைவடையும். அதன் பின்னர் கோடைபயிரான பருத்தி சாகுபடி நடைபெறும். மார்ச் மாதமே பயிர் காப்பீடு நிறைவடைந்ததால் அனைவராலும் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகம் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு மத்தியஅரசு அனுமதி பெற்று காப்பீடு செய்து கொள்ளலாம் என மத்தியஅரசு தெரிவித்திருப்பதால் தமிழகஅரசு சிறப்பு அனுமதி பெற்று பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காப்பீடு கட்டணம்

இது குறித்து திருவாரூர் மாவட்ட பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:- பருத்தி சாகுபடி காப்பீடு காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகளின் அச்சத்தை போக்கவேண்டும். மேலும் பருத்தி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1521 காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்தொகை மிகவும் அதிகம் என்பதால் மத்திய மாநில அரசுகள் காப்பீடு கட்டணத்தை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story