திருத்தணி, மதுரவாயல் தொகுதி வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருத்தணி, மதுரவாயல் தொகுதி வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2021 12:13 AM GMT (Updated: 3 May 2021 12:13 AM GMT)

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர், 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட 10 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த முகவர்கள் மற்றும் வேட்பாளர்களை போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது திருத்தணி மற்றும் மதுரவாயல் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அப்போது திருத்தணி தொகுதிக்குட்பட்ட முகவர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு அனைத்து முகவர்களும் வெளியே அனுப்பப்பட்டனர். பின்னர் அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதேபோல மதுரவாயல் தொகுதியிலும் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இதன் காரணமாக திருத்தணி, மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story