பெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு?- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு


பெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு?- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 May 2021 12:33 AM GMT (Updated: 3 May 2021 12:33 AM GMT)

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து இருப்பதாக முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து இருப்பதாக முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகார்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  
ஆனால் தொடர்ந்து எண்ணிக்கை நடந்தது. இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் பெருந்துறை தொகுதி தி.மு.க. கூட்டணி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலுவின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி புகார் அளித்தனர்.
கட்டுப்பாட்டு கருவிகள்
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்த முகவர்கள் கோகுலகிருஷ்ணன், வக்கீல் திருமலை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருந்துறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மிக வேகமாக நடந்து வருகிறது. முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை விவரம் சரிவர கூறப்படாமல் மிக வேகமாக சுற்றுகளை முடிக்கிறார்கள்.
அப்படி எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவியின் எண்கள் மாறி இருந்தது. 
இதுபற்றி கேட்டபோது தேர்தலின்போது வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறாக எழுதி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற தவறான எண்கள் கொண்ட கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன. 
இதனால் சந்தேகம் அடைந்த முகவர்கள் எங்களிடம் இருந்த படிவம்-17சியில் உள்ள எண்களையும், கட்டுப்பாட்டு கருவி எண்களையும் சரிபார்த்தபோது அனைத்தும் தவறாக இருந்தன. இவ்வாறு 99 கட்டுப்பாட்டு கருவிகளில் எண்கள் மாறி உள்ளன. உடனடியாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தோம். 
ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு எடுப்பார் என்றார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி இது  சிறிய  தவறு. இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறினார்.
நிறுத்த கோரிக்கை
இது தொடர்பாக உரிய முடிவு எடுக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் தி.மு.க. தலைமைக்கு தகவல் தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனால் பெருந்துறை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
தோப்பு வெங்கடாசலம் புகார்
இந்தநிலையில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியில் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவி எண் மற்றும் முகவர்களிடம் வழங்கப்பட்ட எண் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது.  இது  பற்றி கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. வாக்குப்பதிவு எந்திர குளறுபடியில் சில அதிகாரிகள் ஈடுபட்டு தவறான முன்னுதாரணமாக உள்ளனர். இது சரியான நடைமுறையா? என்பதை தேர்தல் ஆணையம் கூறவேண்டும்” என்றார்.

Next Story