ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று- மூதாட்டி பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று- மூதாட்டி பலி
x
தினத்தந்தி 3 May 2021 12:35 AM GMT (Updated: 3 May 2021 12:35 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலி ஆனார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலி ஆனார். 
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவதும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
திரையரங்குகள், டாஸ்மாக் கடைகளின் பார்கள், சலூன் கடைகள் போன்றன மூடப்பட்டு உள்ளன. திருமணங்கள், இறப்பு நிகழ்வில் குறைந்த நபர்கள் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
புதிய உச்சம்
மாநில சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிய உச்சமாக 549 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 165 ஆக உயர்ந்தது. இதில் 18 ஆயிரத்து 675 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 438 பேர் கொரோனாவில் இருந்த மீண்டார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட 3,323 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்தநிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மூதாட்டி பலியாகி உள்ளார். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது மூதாட்டி நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது.

Next Story