முழு ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 May 2021 1:09 AM GMT (Updated: 3 May 2021 1:09 AM GMT)

சேலத்தில் கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின

சேலம்:
முழு ஊரடங்கு காரணமாக நேற்று சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வெறிச்சோடிய சாலைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று மளிகை, டீக்கடை, உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 
சேலம் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, லீபஜார், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.  முழு ஊரடங்கையொட்டி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தடையை மீறி அந்த கடைகள் செயல்படுகிறதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
வீடுகளில் முடங்கினர்
முழு ஊரடங்கு ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. தேர்தல் முன்னணி நிலவரங்களை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு டி.வி.களில் பார்த்து தெரிந்து கொண்டனர். முழு ஊரடங்கால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Next Story