சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது தி.மு.க. ஒரு தொகுதியில் மீண்டும் வெற்றி


சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது தி.மு.க. ஒரு தொகுதியில் மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 1:10 AM GMT (Updated: 3 May 2021 1:10 AM GMT)

10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. ஒரு தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
11 தொகுதிகள்
சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்.டி.), ஆத்தூர் (தனி), மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 11 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டத்தில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனம், தலைவாசல் மாருதி கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அ.தி.மு.க. கூட்டணி
இதில் கருப்பூர்  அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மேட்டூர், சேலம் மேற்கு, ஓமலூர், சேலம் வடக்கு ஆகிய தொகுதிகளுக்கும், அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வீரபாண்டி, சேலம் தெற்கு, ஏற்காடு (எஸ்.டி.) ஆகிய தொகுதிகளுக்கும், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தொகுதிகளுக்கு சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனத்திலும், தலைவாசல் மாருதி கல்வி நிறுவனத்தில் ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டன.
முடிவில் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க. மீண்டும் வெற்றி ெபற்றது. அதாவது எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), சங்ககிரி தொகுதியில் சுந்தரராஜன் (அ.தி.மு.க.), ஆத்தூர் (தனி) தொகுதியில் ஜெய்சங்கரன் (அ.தி.மு.க.), கெங்கவல்லி (தனி) தொகுதியில் நல்லதம்பி (அ.தி.மு.க.), வீரபாண்டி தொகுதியில் ராஜமுத்து (அ.தி.மு.க.), ஏற்காடு (தனி) தொகுதியில் சித்ரா (அ.தி.மு.க.), சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), ஓமலூர் தொகுதியில் மணி (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். இதே போல மேட்டூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சதாசிவம், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தி.மு.க.
சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன் கைப்பற்றினார். இவர் இதே தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story