காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 2-வது முறையாக வெற்றி


காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 2-வது முறையாக வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 1:14 AM GMT (Updated: 3 May 2021 1:14 AM GMT)

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

ஊட்டி

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்.கணேஷ், பா.ஜனதா சார்பில் எம்.போஜராஜன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ்பாபு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் உள்பட 9 பேர் போட்டியிட்டனர். 

இந்த தொகுதியில் 98 ஆயிரத்து 690 ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 186 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 626 வாக்குகள் பதிவானது. 69 ஆயிரத்து 232 ஆண்கள், 70 ஆயிரத்து 394 பெண்கள் வாக்களித்து இருந்தனர். இது 65.67 சதவீதம் ஆகும்.

தொடர்ந்து முன்னிலை

வாக்குப்பதிவுக்கு பிறகு எந்திரங்கள் பாதுகாப்பாக ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 2,562 தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் 1382 வாக்குகள், பா.ஜனதா வேட்பாளர் 629 வாக்குகள் பெற்றனர்.

பின்னர் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் முதலில் நடந்த 11 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். 12-வது சுற்றில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

காங்கிரஸ் வெற்றி 

வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 65 ஆயிரத்து 450 வாக்குகள், பா.ஜனதா வேட்பாளர் எம்.போஜராஜன் 59 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்றனர். 
இதன் மூலம் 5,623 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 தற்போது 2-வது முறையாக வெற்றி அடைந்து உள்ளார். ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகா ஆர்.கணேசுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,376 வாக்குகள் பெற்றார். மற்ற வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தனர்.


Next Story