மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்


மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 3 May 2021 1:15 AM GMT (Updated: 3 May 2021 1:15 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கடைகள், வெளிப்புறங்களில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தது.

மக்கள் நடமாட்டம் இல்லை

அவசிய தேவையான பால் மற்றும் மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியே வந்ததை காண முடிந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடியது. அரசு பஸ்கள் ஓடாததால் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பஸ்கள் இன்றியும், பயணிகள் இன்றியும் காட்சி அளித்தது.

தீவிர சோதனை

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின. ஆட்டோக்கள் ஓடவில்லை. முழு ஊரடங்கு நாளில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால் அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழு ஊரடங்கையொட்டி நீலகிரி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் ஊட்டி பிங்கர்போஸ்ட், ராஜீவ்காந்தி ரவுண்டானா, சேரிங்கிராஸ் உள்பட மாவட்டம் முழுவதும் 27 இடங்களில் போலீசார் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநில எல்லை

சரக்கு வாகனங்கள், அவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலகிரியில் முழு ஊரடங்கை கடைபிடித்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதேபோன்று கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் உள்பட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வணிக நிறுவனங்கள், தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேலும் வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் கூடலூரில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வெளிமாநில லாரிகள் மட்டும் இயக்கப்பட்டது. 

மருந்துக்கடைகள், அரசு ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் இயங்கியது. இருப்பினும் பொதுமக்கள் வருகை இன்றி காணப்பட்டது. மேலும் கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.


Next Story