குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி 3-வது முறையாக வெற்றி 31,646 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார்


குமாரபாளையம் தொகுதியில்  அமைச்சர் தங்கமணி 3-வது முறையாக வெற்றி 31,646 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார்
x
தினத்தந்தி 3 May 2021 6:16 AM GMT (Updated: 3 May 2021 6:16 AM GMT)

குமாரபாளையம்

நாமக்கல், மே.3-
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் தங்கமணி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை 31 ஆயிரத்து 646 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
குமாரபாளையம் தொகுதி
தமிழக சட்டசபை தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் தங்கமணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வெங்கடாசலமும், தே.மு.தி.க. சார்பில் சிவசுப்பிரமணியனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் காமராஜூம், நாம் தமிழர் கட்சி சார்பில் வருணும் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தொடக்கம் முதலே அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் தங்கமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர் பெற்ற வாக்குகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அமோக வெற்றி
இறுதிச்சுற்று முடிவில் அமைச்சர் தங்கமணி 1 லட்சத்து 800 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு 69 ஆயிரத்து 154 வாக்குகள் கிடைத்தது. இதன்மூலம் அமைச்சர் தங்கமணி 31 ஆயிரத்து 646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அமைச்சர் தங்கமணி அ.தி.மு.க. சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 2006-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் தொடர்ந்து 4-வது முறையாக சட்டசபை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.
குமாரபாளையம் தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் - 2,54,439
பதிவானவை- 2,01,925
(1) பி.தங்கமணி (அ.தி.மு.க.) - 1,00,800
(2) மு.வெங்கடாசலம் (தி.மு.க.) - 69,154
(3) சிவசுப்பிரமணியன் (தே.மு.தி.க.) -1,022
(4) காமராஜ் (மக்கள் நீதி மய்யம்) -6,125
(5) வருண் (நாம் தமிழர் கட்சி) 13,240
(6) ஓம் சரவணா (சுயேச்சை) -7,342
(7) நோட்டா -1,342
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
சான்றிதழ் வழங்கப்பட்டது
வெற்றி பெற்ற அமைச்சர் தங்கமணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவள்ளி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
==========

Next Story