கர்நாடக சட்டசபை-மக்களவை இடைத்தேர்தல்: ஆளும் பா.ஜனதா 2 தொகுதிகளை கைப்பற்றியது ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி


கர்நாடக சட்டசபை-மக்களவை இடைத்தேர்தல்: ஆளும் பா.ஜனதா 2 தொகுதிகளை கைப்பற்றியது ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 10:37 AM GMT (Updated: 3 May 2021 10:37 AM GMT)

கர்நாடக சட்டசபை-மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதா 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த பசவகல்யாண், மஸ்கி மற்றும் பெலகாவி மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பசவகல்யாண் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சரனு சலகார், காங்கிரஸ் சார்பில் மாலா நாராயணராவ், ஜனதா தளம் (எஸ்) சார்பில் சையத் அலியும் போட்டியிட்டனர்.

மஸ்கி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரதாப்கவுடா பட்டீல், காங்கிரஸ் சார்பில்

பசனகவுடா துருவிஹால் போட்டியிட்டனர். பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மங்களா சுரேஷ் அங்கடி, காங்கிரஸ் சார்பில் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. பசவகல்யாண் தொகுதியில் தொடக்கம் முதலே பா.ஜனதா வேட்பாளர் சரனு சலகார் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். கடைசி சுற்று வரையில் அவரே முன்னிலை பெற்று வந்த நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 71 ஆயிரத்து 012 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சரனு சலகார் 20 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாலா நாராயணராவ் 50 ஆயிரத்து 383 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் சையத் அலி 11 ஆயிரத்து 390 ஓட்டுகளை பெற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த பசவகல்யாண் தொகுதியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. மஸ்கியில் காங்கிரஸ் வேட்பாளர் 86 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பிரதாப்கவுடா பட்டீல் 55 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 30 ஆயிரத்து 606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் காங்கிரஸ் தனது தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பெலகாவி மக்களவை தொகுதியில் தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சதீஸ் ஜார்கிகோளி முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதனால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற சுற்றுகளில் காங்கிரசுக்கான ஓட்டுகள் குறைந்து வந்தன. வாக்கு வித்தியாசம் குறைந்து, பா.ஜனதா வேட்பாளர் மங்களா சுரேஷ் அங்கடி முன்னிலை பெற்றார். அவர் 10 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலை பெற்றார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பெலகாவி தொகுதி நமக்கு தான் என்று கருதி மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்து வந்த சுற்றுகளில் பா.ஜனதா ஓட்டுகள் குறைந்தபடி வந்தது. பிறகு மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் முன்னிலை பெற்றார். அதன் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். அதன் பிறகு மீண்டும் பா.ஜனதா வேட்பாளர் முன்னிலை பெற்றார். வாக்கு வித்தியாசம் மட்டும் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

இதனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் இறுதியாக பா.ஜனதா வேட்பாளர் மங்களா சுரேஷ் அங்கடி 5,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் 4 லட்சத்து 40 ஆயிரத்து 327 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சதீஸ் ஜார்கிகோளி 4 லட்சத்து 35 ஆயிரத்து 087 வாக்குகளும் பெற்றனர்.

இந்த வெற்றி மூலம் பா.ஜனதா தனது பெலகாவி மக்களவை தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 2 தொகுதியிலும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றி மூலம் மஸ்கி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பசவகல்யாண் தொகுதியை காங்கிரஸ் பா.ஜனதாவிடம் பறிகொடுத்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "பெலகாவி தொகுதியில் எங்கள் கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் வெற்றி வெற்றியே. எங்களுக்கு எங்கு வாக்குகள் குறைந்துள்ளது என்பதை ஆய்வு செய்து அடுத்து வரும் தேர்தலில் அதை சரிசெய்ய முயற்சி செய்வோம். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இதை விட மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதாரணங்கள் உள்ளன. இது ஒன்றும் முதல் முறை அல்ல" என்றார்.


Next Story