சோதனை சாவடியில் நிறுத்தாமல் சென்ற ஆட்டோவை வழிமறித்த போலீஸ்காரர் மீது தாக்குதல் - டிரைவர் உள்பட 4 பேர் கைது


சோதனை சாவடியில் நிறுத்தாமல் சென்ற ஆட்டோவை வழிமறித்த போலீஸ்காரர் மீது தாக்குதல் - டிரைவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2021 10:56 AM GMT (Updated: 3 May 2021 10:56 AM GMT)

சோதனை சாவடியில் நிறுத்தாமல் சென்ற ஆட்டோவை வழிமறித்த போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் உள்பட4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத், 

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டோம்பிவிலி சாகராலி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணியில் போலீஸ்காரர் சாம்கந்த் ராயிதே மற்றும் பால்வே ஆகியோர் இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்ததை கண்ட போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றது. இதனை கண்ட போலீஸ்காரர் பால்வே மோட்டார் சைக்கிள் ஆட்டோவை சில மீட்டர் தூரம் விரட்டிச்சென்று வழிமறித்தார்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோவில் இருந்த பிண்டுசேக்(வயது32), டிரைவர் பிரசாந்த் லோதே(34), சோகில் சேக்(20), மண்டல்(25) உள்பட 6 பேர் சேர்ந்து போலீஸ்காரர் பால்வேயிடம் இருந்த லத்தியை பிடுங்கி அதனால் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதற்கிடையில் அங்கு வந்த கூடுதல் போலீசார், அந்த போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் உள்பட 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

மேலும் தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் பால்வேவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற 2 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story