மாவட்ட செய்திகள்

அதிகாலை வரை நீடித்த வாக்கு எண்ணிக்கைபோடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி + "||" + counting of votes lasting till early morning 0 panneerselvam wins hat trick in bodi constituency

அதிகாலை வரை நீடித்த வாக்கு எண்ணிக்கைபோடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி

அதிகாலை வரை நீடித்த வாக்கு எண்ணிக்கைபோடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேனி:
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3-வது முறையாக அவர் போடி தொகுதியில் மீண்டும் களம் இறங்கினார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
போடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடந்தது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், முடிவை அறிவிப்பதிலும், அடுத்த சுற்றை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
அதிகாலை அறிவிப்பு
நள்ளிரவு 12 மணி வரை 22 சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட்டு இருந்தன. 23-வது சுற்று தொடங்கிய போது வாக்கு எண்ணுவதற்காக எடுத்து வந்த ஒரு வாக்கு எண்ணும் எந்திரம் பழுதானது. இதனால் அந்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை நிறுத்தி வைக்கக்கோரி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் சுமார் 1 மணி நேரம் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு அதில் பதிவான வாக்குகள் கடைசியாக எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி விவரம் அதிகாலை 4 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதன் மூலம் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இந்த தொகுதியில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் அவர் மட்டுமே. தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். காலை 5 மணியளவில் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது அவருடைய மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் உடன் இருந்தார்.