ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி புதிய உச்சமாக 1,360 பேருக்கு தொற்று


ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி புதிய உச்சமாக 1,360 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 3 May 2021 1:38 PM GMT (Updated: 3 May 2021 1:38 PM GMT)

புதுவையில் புதிய உச்சமாக 1,360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

இதேபோல் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5ஆயிரத்து 173 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,360 பேருக்கு தொற்று உறுதியானது. 987 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 9 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 61 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில் 1,842 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 8 ஆயிரத்து 778 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 10 ஆயிரத்து 620 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 49 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்னனர்.

புதுச்சேரியில் 16 பேர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பெத்துச்செட்டி பேட் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர், கொசப்பாளையத்தை சேர்ந்த 76 வயது முதியவர், அம்பாள்நகரை சேர்ந்த 54 வயது ஆண், முதலியார்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, புதுச்சேரியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேங்காய்திட்டை சேர்ந்த 64 வயது மூதாட்டி, லாஸ்பேட்டையை சேர்ந்த 54 வயது ஆண், சாந்திநகரை சேர்ந்த 72 வயது முதியவர், 47 வயது பெண், வாணரப்பேட்டையை சேர்ந்த 53 வயது பெண் ஆகியோர் பலியாகினர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உப்பளத்தை சேர்ந்த 67 வயது முதியவர், புதுச்சேரியை சேர்ந்த 80 வயது முதியவர், கிரு‌‌ஷ்ணா நகரை சேர்ந்த 69 வயது முதியவர், முதலியார்பேட்டையை சேர்ந்த 63 வயது முதியவர், கலாம் வீதியை சேர்ந்த 89 வயது மூதாட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்காலை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனா். இதனால் இறப்பு எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இறப்பு 1.36 சதவீதமாகவும், குணமடைவது 81.34 சதவீதமாகவும் உள்ளது.

Next Story