கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2021 1:43 PM GMT (Updated: 3 May 2021 1:43 PM GMT)

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், சிறிய கட்டுப்பாடு மண்டலங்களை ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி, 

கொரோனா தொற்றின் 2-ம் அலையை எதிர்கொள்வது, விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அமெரிக்காவின் லீட் இந்தியா நிறுவனம் சார்பில் இணையவழி (ஆன்லைன்) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். இதில் லீட் இந்தியா நிறுவனத்தின் அமைப்பாளரும், தலைவருமான ஹரி எப்பனப்பள்ளி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது பிரதமர் ஊரடங்கு கட்டுப்பாட்டை அறிவித்தார். இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்கை காப்பாற்றப்பட்டது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களை மீட்க ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தையும் அறிமுகப் படுத்தினார். கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. மே மாதத்தின் 2, 3 வாரத்தில் இது உச்சத்தை தொடக்கூடும் என அச்சமும் நிலவுகிறது.

தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் இரவு, பகலாக அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சேவைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். கொரோனா நடைமுறைகளை பின்பற்றியும் தடுப்பூசி, பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலமாகவும் இந்த கடுமையான சூழ்நிலையை நாம் வெற்றிக்கொள்ள வேண்டும். நமது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, சிறிய கட்டுப்பாடு மண்டலங்களை ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் நமது இலக்கை அடைய முடியும் என்றார்.

Next Story