ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: பஸ் நிலையம், கடை வீதிகள் வெறிச்சோடின


ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: பஸ் நிலையம், கடை வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 3 May 2021 1:51 PM GMT (Updated: 3 May 2021 1:51 PM GMT)

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பால் பஸ் நிலையம், கடை வீதிகள், முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

புதுச்சேரி,

கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதுப்புது உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை.

இதனால் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையில் இன்று (திங்கட்கிழமை) வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், மார்க்கெட்டுகளுக்கு தடை இல்லை.

இருந்தாலும் புதுவையில் கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தில் இருந்து பஸ்கள் எதுவும் வரவில்லை.

அதேபோல் புதுவையை சேர்ந்த தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படாததால் சாலைகள் வாகன போக்கு வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி நகர் மற்றும் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காய்கறி, பால் பூத்துகள், மருந்துக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளும் ஆட்கள் நடமாட்டமின்றி கழுவி போட்டது போல் காணப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி ஒரு சிலர் மட்டும் நடமாடினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து அனுப்பினர். முகக்கவசம் மற்றும் வாகனங்களுக்கான ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அரியாங்குப்பம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நோணாங்குப்பம் படகுகுழாம் மூடப்பட்டது. வாகன போக்குவரத்து இல்லாததால் முருங்கப்பாக்கம்-அரியாங்குப்பம் இடையே ஆற்றுப்பாலம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story