மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; கடைகள் அடைப்பு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின + "||" + Full curvature In Villupuram and Kallakurichi districts Bus stop

முழு ஊரடங்கால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; கடைகள் அடைப்பு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; கடைகள் அடைப்பு மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் பரவல் வேகமெடுத்து வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிதீவிரமாக பரவி வரும் இந்த கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 2-ம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கான சரக்கு வாகனங்களும் மற்றும் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்பட்டன. அதுபோல் ரெயில் போக்குவரத்தும் நேற்று வழக்கம்போல் இருந்தது. இருப்பினும் விழுப்புரம் வழியாக சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

மேலும் மாவட்டம் முழுவதும் சிறிய பெட்டிக்கடைகளில் இருந்து பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு பொது போக்குவரத்து நிறுத்தம், கடைகள் அடைப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

குறிப்பாக விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருவண்ணாமலை சாலை, விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, செஞ்சி- திருவண்ணாமலை சாலை, திண்டிவனம்- புதுச்சேரி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் சாலைகள் வெறிச்சோடின. வாகன போக்குவரத்து இல்லாததால் சுங்கச்சாவடி மையங்களும் வெறிச்சோடின.

அதே நேரத்தில் டீக்கடைகளும், ஓட்டல்களும் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. ஆனால் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பால் பூத்துகளும், மருந்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. பெட்ரோல் நிலையங்களும் இயங்கின.

நேற்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிந்துகொள்வதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியதோடு அவர்கள் தொலைக்காட்சியிலேயே மூழ்கிக்கிடந்தனர்.

மேலும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய பிரதான சாலைகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது ரோந்து வாகனங்களிலும் போலீசார் வலம் வந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் வழிமடக்கி அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு எச்சரிக்கை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் ஜவுளி, நகை, மளிகை, பாத்திரங்கள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பால்பூத்துகள், மருந்து கடைகள் உளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்த கடைகள் திறந்து இருந்தன. மேலும் மீன் மார்க்கெட்டுகள், காய்கறி அங்காடிகள் அனைத்தும் மூடியே கிடந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் பஸ்நிலையம், நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து இருந்தனர். மேலும் வாகனங்களில ரோந்து சுற்றி வந்து தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த வர்களை பிடித்து அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

முழு ஊரடங்கையொட்டி சங்கராபுரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் மற்றும் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தியாகதுருகம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டும், சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முழு ஊரடங்கால் மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா? தமிழக தேர்தல் ஆணையம் பதில்
முழு ஊரடங்கால் மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.