சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைத்து பூட்டி சீல்வைப்பு


சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில்  வைத்து பூட்டி சீல்வைப்பு
x
தினத்தந்தி 3 May 2021 2:50 PM GMT (Updated: 3 May 2021 2:50 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோனில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி:
சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடியிலுள்ள பிரத்யேக பாதுகாப்பு குடோனில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த பணியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திர குடோன்
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ரூ.3 கோடியே 35 லட்சம் செலவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தரைத்தளம் 5200 சதுர அடியிலும், முதல் தளம் 5090 சதுர அடியிலும் மொத்தம் 10180 சதுர அடி பரப்பில் லிப்ட் மற்றும் லாக்கர் வசதியுடன் குடோன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 100 வாக்குப்பதிவு எந்திரம், 3 ஆயிரத்து 549 வாக்குச்சீட்டு எந்திரம், 2 ஆயிரத்து 121 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரம் (விவிபேட்) ஆகியவை புதிய குடோனுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் எந்திரங்கள் வைக்கப்பட்டன. மேலும் இந்த அறைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள இரும்பு கதவு (லாக்கர்) மூலம் மூடப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, பொதுப்பணித்துறை உதவி
செயற்பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், உதவி பொறியாளர் பாலா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், ஓட்டப்பிடாரம் தாசில்தார், மணிகண்டன், அரசியல் கட்சி பிரமுகர்கள் ரவி (தி.மு.க.), சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story