ரெயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை


ரெயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை
x
தினத்தந்தி 3 May 2021 2:53 PM GMT (Updated: 3 May 2021 2:53 PM GMT)

ரெயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை

கோவை

தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறக்கின்றன. ஆனால் ரெயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

யானைகள் சாவு

கோவை - பாலக்காடு இடையே ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி யானைகள் அடிக்கடி இறந்து விடுகின்றன. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரி ஜெயகிருஷ்ணன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது

ரெயில் மோதி யானைகள் இறந்தது சம்பந்தமாக, ரெயில்வே ஒழுங்கு மற்றும் முறையீட்டு விதிகளின்படி எந்த நடவடிக்கையும் யார் மீதும் எடுக்கப்படவில்லை. 

கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் மீது மோதிய தில் ரெயில் என்ஜினுக்கோ பெட்டிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

வேக கட்டுப்பாட்டு கருவி

குறிப்பிட்ட வேக வரம்பை தாண்டி ரெயில் என்ஜின் ஓடும் போது உடனே நிறுத்துவதற்கு தானியங்கி வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் ரெயில் என்ஜினில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வில்லை. 


ரெயில் ஓட்டுனர்கள் மீது பணி நீக்கம் சம்பந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இரவு நேரங்களில் ரெயில்களின் வேகம் 45 கி.மீ எனவும் பகலில் ரெயில்களின் வேகம் 65 கி.மீ எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஒதுங்க முடியவில்லை

இது குறித்து பாண்டியராஜா கூறியதாவது

 ரெயில் தண்டவாளங்கள் தரைப்பகுதியில் இருந்து 10 அடி முதல் 15 அடி உயரத்தில் உள்ளது. எனவே அந்த இடங்களை யானைகள் கடந்து செல்லும் போது ரெயில்கள் வந்தால் அதனால் வேகமாக ஒதுங்க முடிவது இல்லை.

 எனவே யானைகள் கடப்பதற்காக தண்டவாளத்தின் இருபுறமும் அமைக்கப்பட்ட சாய்வு தளங்களை மேலும் அகலப்படுத்த வேண்டும்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையே விபத்து நடக்கிறது. எனவே அந்த நேரங்களில் ரெயில்களின் வேக வரம்பு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். 

வளைவுகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் ரெயில் மோதி யானைகள் உயிர் இழப்பதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story